Wednesday, July 18, 2012

மலரும் நினைவுகள் - 2


                              நாம் சந்திக்கும் சில மனிதர்கள் நம் வாழ்வில்  நீங்கா இடம்  பெற்று விடுகிறார்கள். அவர்களுடன் நாம் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவர்கள் அறியாமலேயே நம்மை மெருகேற்றும் அவர்களது சிந்தனைகள், நாம் வெளிகாட்டியே இருக்காத அவர்கள் மீதான அன்பு போன்ற சிலவற்றை பின்னாளில் நினைத்துப் பார்க்கும் போது அந்த காட்சிகள் மீண்டும் உயிர் பெற்று நம் கண்முன் நடமாடுவதை உணர முடியும். அப்படி நான் சந்தித்த ஒரு நபர்தான் “பாப்பா”. அவரைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளேன்.

பாப்பா





                               எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே ”பொன்னா” தான் எங்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து வந்தார். ஒரு நாள் காலை தனது மனைவியை கூட்டி வந்து
“இனிமேல் இவதானுங்க வருவா சுத்தம் செய்ய” என்றார்
“உன்னோட பேர் என்னமா” அம்மா
“பாப்பாங்க”
                            இத்தனையும் தூக்கக் கலக்கத்துடன் அப்பாவின் மடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.பாப்பா அதிகம் பேசி நான் பார்த்ததேயில்லை.அளந்து தான் வார்த்தைகள் விழும். நிறைய இடங்களில் புன்னகை மட்டுமே பதிலாக இருக்கும்.மாநிறத்துடன் பெரிய கண்களை கொண்ட பாப்பாவைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது எனக்கு.
                            காலையில் வந்தவுடன் கடகட வென வேலைகளை முடித்துவிட்டு பழையது இருந்தால் வாங்கிக் கொண்டு சென்று விடுவார். நானும் தங்கையும் விளையாடும் போது கடக்க நேர்ந்தால் புன்னகைத்து விட்டுப் போவார்.
                              ஒரு நாள் பாட்டி வேலையாய் இருந்ததால் பாப்பாவிற்கு பழையதை என்னிடம் குடுத்துப் போட சொன்னார்.போடும் போது பாத்திரம் பாப்பாவின் பாத்திரத்தில் பட்டுவிட்டது.
“ஏன்டி அனி, பாத்திரத்த முட்டாம போடத் தெரியாதா,? போய் பாத்திரத்த நல்லா கழுவிட்டு வா”  பாட்டி
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பாட்டியின் வார்த்தைகளைக் கேட்டு. பாப்பாவின் முகமோ எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தது.
“முட்டாம போடு கண்ணு” என்றார்.
நான் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் வந்து பாட்டியிடம் சண்டை போட்டேன்.
“முட்டினா என்னவாம்,ஏன் முட்டக் கூடாது பாட்டி”
“அவங்க எல்லாம் கீழ்சாதிக்காரங்க, நாம தொடக் கூடாது”
“ஏன் பாட்டி அப்படி சொல்லறீங்க, பாப்பாவிற்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்”
“முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள பேசரப் பேச்சப் பாரு, எனக்கே அறிவுரை சொல்லரா.....போய் வேலையைப் பாரு”
“அவங்களும் மனுசங்க தான, நீங்க பண்ணறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை,இனிமேல் என்னைப் போடச் சொல்லாதிங்க” சொல்லிக் கொண்டே வெளியில் வந்த போது தான் பாப்பா அங்கேயே நின்று கொண்டு இருப்பது தெரிந்தது.
”பெரியவங்கள எதிர்த்துப் பேசரது தப்பு கண்ணு” பாப்பா
“தப்புனு தோணினா யாரா இருந்தாலும் எதிர்த்து பேசரது தப்பில்லை பாப்பா, உனக்கு கஷ்டமா இல்லையா கேட்கரப்ப”
“பழகிருச்சு கண்ணு எனக்கு” என்று சொல்லி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையில் இருந்த வலியை உணரமுடிந்தது.
“இனி வரும் காலத்துல சாதிமதம் பார்ப்பது குறைந்து விடும் பாப்பா”
“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு கண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அன்று தான் முதன்முதலாக பாப்பாவிடம் நான் அதிகம் பேசியது. அதன் பிறகு பாப்பாவை எங்கு பார்த்தாலும் பாசத்தோடு இரண்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டே செல்லுவார்.
                             ஆறாம் வகுப்பு வந்த பிறகு துவைக்கர கல்லில் அமர்ந்து படிக்கும் பழக்கம் தொத்திக் கொண்டது. அதன் பிறகு பாப்பாவிடம் அதிகம் பேசுகின்ற வாய்ப்பும் உருவானது. அவருக்கு புஷ்பா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் ,என்னை விட 5 வயது குறைவு என்றும் கூறினார்.
                              “நல்லாப் படிக்க வைக்கணும் கண்ணு என் பொண்ண, என்ன மாதிரி அதுவும் கஷ்டப்படக்கூடாது” எப்பொழுது என்னிடம் பேசினாலும் வந்து விழும் கடைசி வாக்கியம் இதுவாய்த் தான் இருக்கும்.
                           சில வருடங்கள் கழித்து நீண்ட நேரம் பாப்பாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது கனவுகள்,குடும்பச் சூழல்,பெண்ணைப் பற்றிய கனவுகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார். அவரது பெண்ணின் படிப்பிற்கும்,திருமணத்திற்கும் நான் வேலைக்குச் சேர்ந்ததும் உதவுவதாக சொன்னேன். அன்று அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் எழுதி விட முடியாது.
                        காலம் வேகமாக உருண்டோடியது. இளங்கலைப் பட்டம் முடித்து விட்டு மேலே படிப்பதா,இல்லை தொழில் துவங்குவதா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான்.
                        “3 நாள் ஆச்சு பாப்பா வேலைக்கு வந்து, எப்பவும் இப்படி பண்ண மாட்டாளே “ என அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
                        “உடம்பு சரியில்லாமல் இருக்கும் அம்மா” சொல்லும் போதே என்னவாகி இருக்கும் என்ற கவலை மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது. வீடு எங்கே இருக்கிறது என்றும் தெரியாது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக வேலைக்கு வரும் பாப்பாவைப் பற்றி எந்தளவு அக்கறையாய் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.
                      2 நாட்கள் கழித்து பாப்பாவே வந்தார். முகமெல்லாம் அழுது வீங்கிப் போயிருந்தது. ஏதோ விபரீதம் நடந்து இருப்பது பார்த்ததும் புரிந்தது. எனைப் பார்த்ததும் மீண்டும் அழ ஆரம்பித்தார். அவரே சொல்லும் வரை பொறுமையாய் இருப்பது என்று முடிவு செய்தேன். அழுது ஓய்ந்த பிறகு அவர் சொன்ன வார்த்தை பெரும் அதிர்ச்சியையைத் தந்தது.
“பொண்ணு ஓடிப் போய்ட்டாமா”
                    ஒரு நிமிடம் உலகமே தலை கீழாய் சுத்துவது போல் இருந்தது. பாப்பாவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. இன்னும் பாப்பா அழுது கொண்டே இருந்தார். அவரைச் சமாதானப் படுத்த வார்த்தைகளைத் துழாவிக் கொண்டிருந்தேன். எல்லோரும் ஆறுதல் சொல்லி பாப்பாவை அனுப்பி வைத்தார்கள். பாப்பாவின் கனவுகளைத் தூள் தூளாக்கிய புஷ்பா மேல் கோபமாக வந்தது.
                    அதன் பிறகு பாப்பா வெறும் நடைப் பிணமாகவே உலா வந்தார். கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே ஒரு வார்த்தையில் பதில் வரும். சிரிப்பு, மகிழ்ச்சி என்ற வார்த்தைகள் அவர் வாழ்க்கைப் புத்தகத்தில் இருந்து தொலைந்து போய்விட்டது. அவரிடம் ஏதும் பேசி கஷ்டப் படுத்த கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
                     ஒரு நாள் முகம் நிறைய மகிழ்ச்சியோடு வந்தார். அவரது மகிழ்ச்சி என்னையும் தழுவிக் கொண்டது. ”எனக்கு பேத்தி பொறந்து இருக்கா கண்ணு, இப்பதான் பார்த்துட்டு வந்தேன்.அப்படியே புஷ்பாவைப் பார்த்த மாதிரி இருக்கு.” பாப்பாவைப் பழைய படி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.அதன் பிறகு தினமும் பேத்தியைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
                     அவர் மறந்தாலும் “உன் பேத்தி இன்னைக்கு என்ன புதுசா பண்ணினா” என்று யாராவது ஒருவர் கேட்க தவற மாட்டோம். பேத்தியைப் பற்றிப் பேசும் போது பாப்பாவின் முகத்தில் தெரியும் பூரிப்பு,பேச்சில் தெரிக்கும் சந்தோஷம் எங்களையும் தொத்திக் கொள்ளும்.
                     ஒரு நாள் காலை புஷ்பாவை கூட்டிக் கொண்டு வந்தார் பாப்பா. “இதுவும் வேலைக்கு போக வேண்டிய சூழல் கண்ணு, நல்லாப் பாத்துக்கர வீட்டுல தான் வேலைக்கு விட முடியும், அறியாப் புள்ள, கஷ்டப்படக்கூடாது” அந்தக் குரலில் தாயின் பாசம் வழிந்து ஓடியது. புஷ்பாவை தன்னைப் போல் இல்லாமல் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற பாப்பாவின் கனவு தவிடு பொடியானதை நினைக்க வேதனையாய் இருந்தது.
                      அடுத்த நாளில் இருந்து புஷ்பா வேலைக்கு வர ஆரம்பித்தாள், தன்னைப் போல் இல்லாமல் தன் குழந்தையையாவது படித்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவுகளைக் கண்களில் தேக்கியபடி.


2 comments: