Monday, March 12, 2012

தவிக்கும் மனம்



வைரத்தை இழந்த
குருடன் போல
சிலவற்றை இழந்த பிறகே
இழந்ததின் மதிப்பு தெரிகிறது.
மீட்டு எடுக்க நினைக்கையில்
தன்முனைப்பு தடுக்கிறது

காட்டாற்று வெள்ளமென
சீறும் எண்ணங்களுக்கு
தடை போட முயற்சித்து
வெடிக்கும் பாறையாய்
சிதறித் தான் போகிறேன்.

எண்ண அலைகளை
அடக்க முயற்சிக்க
பெளர்ணமி அலைகளாக
மேலெழும்பி மூழ்கடிக்கிறது.

இதழ்கள் மலர பேசினாலும்
வார்த்தைகள் ஏனோ
குளத்தின் பாசி போல
சோகத்தை அப்பிக் கொண்டே
உதிர்கிறது

சோகத்தை மறைக்க
மெளன கவசம் அணிகிறேன்.
மணித்துளிகள் நகர
அணலில் இட்ட மெழுகாய்
கவசமும் உருக,
நீர் கசியும் அணையாகிறேன்.

நிலவைச் சிறைவைத்த குளமாய்
எல்லாமே காட்சிப் பிழையாக
வேரறுந்த மரமாய்
வீழ்கிறேன் மண்ணில்
செய்வதறியாமல்

1 comment:

  1. இதழ்கள் மலர பேசினாலும்
    வார்த்தைகள் ஏனோ
    குளத்தின் பாசி போல
    சோகத்தை அப்பிக் கொண்டே
    உதிர்கிறது//நல்ல உவமை..தவிப்புடன் என்றும் இருக்க கூடாது... அதனை தவிர்க்க என்ன செய்யவேண்டுமோ அதற்க்கான சிந்தனையில் மனதை செலுத்தினால் தவிப்பை தவிர்க்கலாம்..

    ReplyDelete