Monday, February 20, 2012

புரியாத புதிர்


திராவகத்தை ஊற்றிய பின்னும்
நம்பிக்கை பூ மலர
காத்திருக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


வாழ்க்கைச் சதுரங்கத்தில்
புத்தியைப் பின்பற்றாமல்
தோல்வியைத் தழுவும் மனம்
புரியாத புதிர் தான்.


பாலைவனத்தில் நீர்வீழ்ச்சியை
கற்பனை செய்து வாழ்க்கையை
வீணடிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அமுதமென நினைத்து பருக
விடமாய் போனதை
விழுங்கவும் முடியாமல்,
உமிழவும் முடியாமல்
தத்தளிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அன்பைச் சொல்ல எண்ணி, அதை
கோபமாய் வெளிப்படுத்தி
செய்வதறியாது விழிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அன்பினால் நிகழும் அத்துனையும்
கடமைக்காய் நிகழ
கனவுகளைத் தின்று வாழும் மனம்
புரியாத புதிர் தான்.


பாதை முழுவதும் முள்ளாய் இருக்க
மலரைத் தேடியே
கிழிபட்டும் அயராது
பயணம் தொடரும் மனம்
புரியாத புதிர் தான்.

1 comment:

  1. மனதில் இருப்பதை
    அப்படியே கவிதையில்
    இறக்கிவைப்பதும்
    புரியாத புதிர்தான் :))))

    ReplyDelete