Sunday, November 25, 2012

கனவே நீதானென்பதை


மலைகளின் முகடுகளில் தடம் பதித்து
விலகும் முகில்களாக கணநேரத்தில்
மறைந்து போகிறாய், நினைவுகளை
நினைவுச் சின்னமாக விட்டுவிட்டு.
 
ஒவ்வொன்றாக அசைபோட்டு
தேடுகிறேன் நூல்கண்டாக
நிறைந்திருக்கும் நினைவுகளின் நுனியை.

முதல் துளியின் பரவசத்தை மனதில்
இட்டு நிரப்புகிறது உன்னுடனான
மணித்துளிகளின் தடயங்களெல்லாம்.

செல்லரித்துப்போன என் கனவுகளை
நினைவாக்க, எனைப்பிரிந்த நீ,
எப்போது உணர்வாய் இப்பொழுது
என் கனவே நீதானென்பதை......

பயணிக்கிறேன்


காற்றில் திசை மறந்தே பறக்கிறேன்
இலக்குகள் இல்லாமலேயே.

அனுபவங்கள் என்னும் பாடங்கள்
மெருகேற்றி உருமாற்றியது என்னை
சுமைகளை இறக்கிய பின் சுகமாக
பறக்க முடிகிறது இலகுவாய்

எனைப்படிக்கும் ஆவலில் கை நீட்டி
காத்திருக்கும் அன்பான கைகளில் தஞ்சம்புக
தேடியே பயணிக்கிறேன் தொய்வேயில்லாமல்

பாராமுகமாய்


பற்றிவிட தோணவில்லை பறக்கும் போது,
கண்ணில் துளிர்த்த துளி கலக்கமும்
கரைந்தே போனதே மறைந்தவுடன்,
கனவுகளின் சிதைந்த கோலம்
காட்சியாக கண்முன் பறக்க,
மெளனமாகச் சிந்திய கண்ணீர் துளிகள்
மண்ணோடு சமாதியாகிறது சத்தமேயில்லாமல்

இருந்து விட்டுச் சென்றதன்
தடயங்களை தடவுகையில் மேலெழுந்த
உணர்ச்சியைப் பாகுபடுத்த இயலவில்லை
மகிழ்ச்சியென்றும் ,துக்கமென்றும்

திரும்பாதென்று தெரிந்த பின்னும்
சேருமிடம் அறியும் ஆவலை
அடக்க இயலவில்லை முற்றிலுமாய்.
 
பற்றியிருந்த காலங்கள் பார்த்துப் பார்த்து
பரவசமான மணித்துளிகள் பிரசவித்த
எழுத்துக்களை பாசமாய் தடவியபடி
பயணம் தொடர்கிறது பாராமுகமாய்
 

என் அன்பினை



சிதைந்த கனவுகளுக்கு
சமாதிகட்டிய பிறகு
சமாதானமாகாத மனம்
சிந்துகிறது ஒற்றைத் துளி கண்ணீரை

மூடிய இமைகளுக்குள் உலாவிய
ஒற்றைக் கண்ணீர் மடை திறந்ததும்
இமைமுடிகள் நனைத்து தடையற்று
கன்னம் கடந்து காணாமல் போகிறது.

இமைமுடியின் ஈரப்பசை
மெளனமாய் பறைசாற்றுகிறது
உன்மீதான என் அன்பினை.


Thursday, November 22, 2012

காலைப் பொழுது



புலரும் பொழுதுகள் அறிவதில்லை
கலைக்கப்பட்ட கனவுகளின் வலியை.
கண்விழித்த சில நொடிகள்
கரைகிறது கனவின் வீச்சத்தோடே

அடிக்கடி பார்க்கும் கண்மலர்களால்
சில மணித்துளிகளுக்கு பரபரப்பை
பூசிக் கொள்கிறது கடிகார முட்கள்

பரபரப்புகள் அடங்கியபின் நீண்ட
அமைதியை போர்த்திக் கொள்கிறது காலை.
கண்மூடி காலைக் கனவை துழாவுகையில்
துடைக்கப்பட்ட கரும்பலையாக காட்சியளிக்கிறது.
 
அறைகளில் பரவும் திடீர் அமைதி
தனிமையை இட்டு நிரப்புகிறது மனதில்.
தனிமை வீணையின் நரம்புகளை மீட்டி
ஒலியெழுப்புகிறது சில நினைவுகள்.

நினைவுகளின் பாதையில் பயணிக்கையில்
தட்டி எழுப்புகிறது மயங்கிய மனதை
அடுத்த வேலைக்கான அழைப்பு........
 

விடியல்


விடியலின் வருகையை இனியகுரலில்
பறைசாட்டுகிறது முகம்தெரியா
ஒரு பறவையின் குரல்.

அலைபேசியின் அலாரத்தில் கண்விழித்த
எரிச்சலை அழகாக விலக்கி
மகிழ்ச்சியை இட்டு நிரப்புகிறது.

இடைவெளி விட்டு ஒலிக்கும் குரலின்
கிறக்கத்தில் மெதுவாக அவிழ்கிறது
மனமொட்டு மணம்பரப்பிய படி.....

பதிலுக்கு குரலெழுப்பி நன்றிசொல்ல
துடிக்கும் இதயத்தை நகரும்
கடிகார முட்கள் கட்டிப் போடுகிறது.

பேதை மனது


 
கவிதை குளத்தில் தூண்டிலில் சிக்கும்
வார்த்தைகள் எல்லாம் உந்தன் வாசனை
பூசியே வெளி வந்து விழுகின்றன.

வார்த்தைகளின் வீச்சில் நீயே நீக்கமற
நிறைந்திருக்க தவிர்க்க முடியாமல்
தவித்தே தள்ளி நிற்கிறேன்

தள்ளி நிற்கையில் சிந்தையில் நிறைந்து
யாதுமாகி நானறியாமல் இதயத்தில்
சிம்மாசனமிட்டு ஆட்சி செய்கிறாய்.

எதிர்கட்சியாக காலம் கடத்த எத்தனிக்க
எனை வஞ்சித்து உனக்காகவே வக்காலத்து
வாங்குகிறது பேதை மனது.

Tuesday, October 9, 2012

அந்த நிமிடம்




சுவாசத்தை உள்நோக்கி கவனிக்க
சுகமாக பயணிக்கும் சிந்தனைகள்
சுத்தமாய் சத்தமில்லாமல் துடிக்கும் இதயம்
நதிநீராய் தவழும் உதிரணுக்கள்
முடிச்சுக்கள் மெல்ல அவிழ

மகிழ்ச்சி மொட்டுகள் வெடித்து பிரபஞ்சம் நிறைக்க
உள்ளங்கையில் கடலை அடக்கி இறுமாப்பு கொள்ள
புல்நுனியில் படர்ந்த பனித்துளியில் கண்ணயற
விண்நோக்கி சிறகுகள் விரித்து பறக்கிறேன்.

விரித்த சிறகிற்குள் நியாபக இறகுகள்
விரிவாக காட்சியளிக்க,அத்துனையும்
அசைபோட்டு ஆணவம் தொலைக்கிறேன்

கடந்த நொடியின் வீச்சம் மனதை அடைக்க
தயங்கியே முடிக்கிறேன் பயணத்தை.
அந்த நொடியில் எல்லாம் அடைந்தும்
ஏதுமில்லாதவளாய் இலகுவாகிறது மனம்
     
 

மருட்சியில்லாமல் மனம்


தூரலில் நனைந்தபடி
தூரமாக நீயிருக்க
தூக்கம் கலைந்த குழந்தையாக
துளி கண்ணீர் விடுகிறது
மனம் உன் நிழலுக்காக
தூவிய துளிகள்
தூங்காத நெஞ்சத்தின்
தூதாக மாறியதால்
துன்பங்கள் கரைந்தோட
துள்ளிக் குதிக்கிறது மனம்.

மனதின் மொழியறிந்து
மலர்ந்து அருகில் நீ வர
மருட்சியில்லாமல் மனம்
மகிழ்ச்சியில் ஆழ்கிறது

Saturday, October 6, 2012

சுவாசமே நானாவேன்


இறுக்கங்களை வெடிவைத்து தகர்த்து
சந்தோஷ துகள்களாக பறக்கவைக்கிறாய்.
நழுவிச் செல்கிறேன் கைகளிலிருந்து
இறுகப்பற்றி இணையாக இருக்கிறாய்
வறண்ட குளத்தில் மழையாக பொழிந்து
உணர்ச்சிகளுக்கு உயிரூட்டுகிறாய்.
வானவில்லாய் ஒரு நொடியில்
வர்ணஜாலங்கள் காட்டி விழிமயங்க
வைத்து கடமையென மறைந்தே போகிறாய்.

உன்னை நினைவுகளால் உயிரூட்டி
உன் வாசத்தை சுவாசித்தே
உயிர்வாழ்கிறேன் உலகினிலே.
உன் கடமைகள் கரைந்த பிறகு
சுவாசமே நானாவேன் என்ற நம்பிக்கையில்
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்

ஓரங்க நாடகம்


ஒற்றை முத்தத்திற்காக நீயாடும்
நாடகங்கள் இதழ்களின் ஓரத்தில்
புன்னகையை தவழ விடுகிறது.

ஓரக் கண்ணால் ஓங்காரமாய்
இரசித்தவிட்டு காணாததாய் நகர்கிறேன்.
கோபத்தின் உச்சியில் மலைஏறி
கொடிபிடிக்கிறாய் யுத்தத்திற்காக.

முன்நெற்றியில் இதழ்களால் சமாதான
ஒப்பந்தம் போட்டு ஓடவிரட்டுகிறேன்
கோபங்களை, மெளனச்சிறையிலிருந்து
விடுதலை பெறுகின்றன வார்த்தைகள்.



Wednesday, September 26, 2012

பாரமுகம்


கூட்டினில் கூடி வாழ்ந்த
குருவிகள் பறந்தே போயின.
காடு வீடாய் மாறின
கானங்கள் முகாரி யாகின.
முற்றத்திலே முல்லை வளர்த்து
முகமலர முகிலை அழைக்க
பாரினில் துளிகளை சிந்திவிட்டு
பாரா முகமாய் சென்றன

பார்வையே


காலை நேரத்திலே சருகுகள் குவிந்த சாலை ஓரத்திலே
தணல் மூட்டியே தடயம ழித்தினர் ஒரு கணத்திலே
கன்னி மனத்திலே எரிமலையாய் எழுந்த சினத்தையே
தணியச் செய்ததே காதல் பெருக்கும் காளையுன் பார்வையே
 

துளி விஷம்

 
 
 
 
கடலினை யென்ன செய்யுமென
ஒருதுளி நஞ்சினை கலந்தனர்.
கடலே விஷமாக உருமாற
உருகி தவிக்கின்றனர் இன்று.
பிறர்மீது பழிகூறி பிதற்றினரே
பிழையே தனதென்பதை மறந்து.
தனது பிழைகளை களைந்தபின்னே
பிறர்பிழை காண்பது நன்று.

Monday, September 24, 2012

புலரும் பொழுது

 
 

புலரும் பொழுதினில் மலரும்
மொட்டுக்களின் இதழ்வழி கசியும்
ஏகாந்தத்தை விழிவழி பருகி
பசியாருகிறேன் பரவசமாய்.
பரவசம் பரவி உதிரத்தில்
கலந்து புத்தியில் நிறைந்து
இதழ்களில் படிகிறது புன்னகையாக

காலைப் பொழுதின் ஒவ்வொரு
அசைவையும் உற்று நோக்க ஆயிரம்
கற்பனைகள் உயிர்த் தெழுகின்றன.

விநாடிக்கு விநாடி புதுமுகம் காட்டி
மாயாஜாலம் செய்யும் இயற்கையை
இரசித்தபடி காட்சிகளை விழிகளில்
சிறைப்பிடிக்கிறேன் இரசிகையாக......

Tuesday, September 18, 2012

மனம்



மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

கண்ணீர் துளியை விரல் நுனி
ஏந்தி மொழிபெயர்க்கையில்
சமாதி கட்டுகிறது மனஸ்தாபத்தை
அன்பை அருவியாக கொட்டி

அருவியில் மூழ்கியெழுந்தபின்
அத்துணையும் அழகாக புலப்பட
அளவிளா இன்பத்தை அனுபவித்து
அமைதியாக அடங்குகிறது மனம்.
 

Monday, September 17, 2012

மலரும் நினைவுகள் -6

 

எங்கள் வீடு

 
 
 



அந்தக் கணம் மனம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. கார் மிக மெதுவாக நகர்வது போல் ஓர் உணர்வு.பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டைப் பார்க்க சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு செல்கிறோம். மனம் முழுக்க எங்கள் வீட்டைச் சுற்றியே வலம் வந்து கொண்டு இருந்தது.பயணம் ஆரம்பித்தது முதல் எங்கள் வீட்டுப் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தேன்.மகனும் கணவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

பல வருடங்களாக ஒரே தெருவில் எல்லோரும் வாழ்ந்து வருவதால் அத்தைவீடு, சித்தப்பா வீடு என்று முறை வைத்தேதான் அழைப்போம். எங்களுடையது நான்கு வீடுகள் கொண்ட காம்பவுண்ட் வீடு. எங்கள் காம்பவுண்ட்க்குள் நுழைந்தவுடன் இருக்கும் சிறிது காலியிடம் இருக்கும். அதில் வண்டிகள் நிறுத்திவைத்து இருப்பார்கள்.

அங்கே இரண்டு வீடுகள் இருக்கும்.வீட்டின் முன்புறம் நான் வளர்த்த முல்லைச் செடி,பக்கத்து வீட்டில் இருந்து என்னை தினமும் நலம் விசாரிக்கும் நந்தியா வட்டப்பூ, இன்னொரு பக்கத்து வீட்டில் இருந்து தென்றலால் தாலாட்டும் தென்னை மரம் இன்னமும் பசுமையாக நினைவுகளில் நிழலாடுகின்றன. முதன் முதலில் எங்கள் முல்லை பூத்த போது நான் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இன்னும் இரகசியமாய் காதோடு  ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அருகில் சிறிய சந்து இருக்கும், அதில் நுழைந்து வெளிவந்தால் கண்ணில் முதலில் தென்படுவது அழகாய் பசுமையாக வளர்ந்து இருக்கும் செடிகள் அதன் பக்கத்தில் நம்மைக் கவர்வது எங்கள் வீட்டு கிணறு. எங்கள் வீட்டின் பின்வாசல் வழியாக அங்கே நேராக செல்ல முடியும்.அதன் எதிர்புறம் இரண்டு வீடுகள் வரிசையாக அமைந்து இருக்கும்.

செடிகளில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, கடவுளுக்காகவே தினமும் பூக்கும் செம்பருத்தி செடி தான். அதன் அருகில் 3 அல்லது 4 வாழை மரங்கள் இருக்கும்.வாழைக் குலை தள்ளும் போது அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.எந்த திசை என்ன பலன் என்று ஒரு பெரிய மாநாடே நடக்கும்.அதன் பக்கத்தில் பப்பாளி மரம் இரண்டு இருக்கும்.

அருகில் தக்காளிச் செடி,கீரை வகைகள் கொத்தமல்லி என பாட்டி பதியமிட்டு இருப்பார். அதன் பின்னால் இருக்கும் இடம் எங்கள் இராஜ்ஜியம். எங்களுக்கு பிடித்த செடிகளை கொண்டு வந்து நட்டு வைத்திருப்போம்.அதில் பிரதான இடம் ரோஜாவுக்கு உண்டு. கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து தினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது எங்கள் வேலை.

எங்கள் துவைக்கிற கல்லை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்.எனது தோழி என்று கூட சொல்லலாம் அதை. மிகுந்த துக்கமோ,சந்தோஷமோ தஞ்சம் புகும் இடம் இந்த துவைக்கிற கல் தான். அதில் அமர்ந்து தான் கல்கியையும்,பாலகுமாரனையும் அறிமுகம் செய்து கொண்டேன். சூரிய உதயத்தையும், மாலை நேரத்தில் சூரியன் மறையும் அழகையும் துவைக்கிற கல்லின் மீது அமர்ந்து பார்க்கும் சுகமே அலாதி தான்.

எனது ஒவ்வொரு அசைவையும் பதிந்து வைத்திருக்கும் எங்கள் வீடு. எனது தாத்தாவுடன் அமந்து பேசிய இடங்கள்,அத்தை சித்தப்பாவுடன் விளையாடிய இடங்கள், அம்மா பாரதியின் பாடல்களை அறிமுகப்படுத்திய இடங்கள், தங்கையுடன் செல்லச் சண்டைகள் (நிஜமா சொன்னா இரத்தம் பார்க்காம ஓயாது எங்க சண்டைகள்) போட்ட இடங்கள். அப்பாவின் கைப்பிடித்து நடைபழகிய இடங்கள், கற்பனைப் பாத்திரங்களாய் மாறி வசனங்கள் பேசிய இடங்கள் அனைத்தும் மனதில் படம் போல் விரிந்து இதழ்களில் புன்னகையை குடியேற வைத்தது. மகனிடம் அந்த இடங்களை எல்லாம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை அணை கடந்த வெள்ளம் போல் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

எங்கள் வீதியை அடைந்ததும் இனம் தெரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன மனதை. தார் சாலையில் சமாதியாகி இருந்தன எங்கள் பாதச் சுவடுகளைத் தாங்கிய மணல்கள். முக்கால்வாசி ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக உருமாறி இருந்தன. எல்லாம் மாறி இருந்தது,எங்கள் வீடு முற்றிலும் வேறு உருவம் எடுத்திருந்தது. அடையாளங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ ஒரு தீர்மானமான முடிவு உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. வீடு நெருங்கியவுடன் காரின் வேகத்தை மெதுவாக குறைத்தார் ஓட்டுனர்.

“அண்ணா,நிறுத்த வேண்டாம் போங்கள்” என்ற எனது கரகரப்பான குரல் எல்லோரையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது.

”அனி என்னாச்சு,இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டிற்குள் போக வேண்டாமுனு சொல்லர” என்று ஆச்சரியமாக கேட்டார் கணவர்

“இல்லமா,போலாம்” எனது குரலில் தெரிந்த ஏதோ ஒன்று அவரையும் மெளனமாக்கியது.திருப்பூர் நோக்கி கார் திரும்பியது.அமைதி மட்டுமே அங்கே நிலவியது.

எல்லோரும் விசித்திரமாக என்னை பார்க்க,எனக்கோ எதையோ மனதில் பசுமையாக வைத்த திருப்தி இருந்தது.


கல்கியின் வாசகி



சில வருடங்களுக்கு முன் மாமல்லபுரம் சென்ற போது மாமல்லர், மகேந்திர பல்லவர்.சிவகாமியின் எண்ணங்களே மனதை ஆக்கரமித்து இருந்தன.அந்த மனிதர்களின் பாதச் சுவடுகள் படிந்த இடம் இது என்ற எண்ணமே மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணவோட்டம் மனதில் ஓடியது. பல ஆயிரம் சிற்பிகள் வேலை செய்ய, உளியின் ஓசை விடாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கும். எத்தனை சிற்பிகளின் உழைப்பு,

அன்று அவர்கள் யோசித்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் இத்தனை காலம் கடந்தும் அவர்களின் உழைப்பு உயிரோடு இருக்கும் என்பதை. இரவு பகல் பாராமல் சிற்பம் செய்வதை தவம் போல் செய்திருப்பதை ஒவ்வொரு கல்லில் செதுக்கிய சிற்பமும் பறைசாற்றுகிறது.

மெதுவாக கால்கள் மண்ணில் புதைய நடந்த போது அவர்களின் பாதங்களையும் இந்த மண்கள் தீண்டி இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கூடவே கல்கியின் நினைவும் மனதில் தோன்றுவதை தடுக்க இயலவில்லை. வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே மனனம் செய்து கொண்டிருந்த சோழ, பல்லவ சாம்ராஜ்ஜியங்களை இரசித்து இரசித்து படிக்க வைத்த பெருமை கல்கியையே சாரும்.

திருமணம் ஆன புதிதில் தஞ்சாவூர் பெரிய கோவில் சென்ற போது கோவில் என்பதையும் மீறி இராஜ இராஜ சோழன் சுவாசமே அங்கே நிறைந்திருப்பதை போன்ற ஒரு பிரம்மை தோன்றியது. இது கல்கியின் எழுத்துக்கள் செய்த மாயம். கல்கி படைத்த பாத்திரங்களை பற்றி பேசவே நட்புகளை துழாவிய காலங்கள் உண்டு. பாத்திரங்களின் தன்மைகளைக் குறித்து பெரிய விவாதமே நடக்கும் நட்பு வட்டத்தில்,.

“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன்” என்ற பாடல் இளமையாய் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.அவரின் ஆராய்ச்சி அசர வைக்கிறது.சோழர்கள்,பல்லவர்கள் பற்றி அறிந்ததை கட்டுரையாக குடுக்காமல் அழகிய நாவலாக படைத்து அதில் அவர்களை உயிருள்ள பாத்திரமாக நடமாட வைத்து நமது மனங்களை கொள்ளை அடித்து இருப்பார்.

இலங்கையில் உள்ள வீதிகளையும்,விழாக்களையும் எழுத்துக்களால் கண்முன் கொண்டு வந்திருப்பார். பூங்குழலி கதாபாத்திரம் மனதில் சொல்லமுடியா பாதிப்பை ஏற்படுத்தியது.அவளின் இரவு நேரம் படகுப் பயணத்தில் நாமும் சேர்ந்தே பயணித்து இருப்போம்.

ஒரு எழுத்தாளனின் மகத்தான வெற்றி படித்து பல காலம் ஆகியும் அவரது எழுத்துக்கள் மனதை விட்டு அகலாதிருப்பது தான்.நான் பார்த்து வியந்த முதல் எழுத்தாளர் கல்கி அவர்கள்.ஒவ்வொரு சரித்திர நாவலிலும் அவரது மெனக்கெடல் நன்றாகத் தெரியும்.

இராச இராச சோழனையும்,மாமல்லனையும் நினைவு கூறும் பெருமை தஞ்சைக்கும் மாமல்லபுரத்திற்கும் இருந்தாலும் அவர்களை நன் மனதில் உயிரோடு நடமாட வைத்த பெருமை கல்கியையே சாரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Saturday, September 15, 2012

விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி

 
 
 


நிந்தன் கோபத் தாகத்திற்கு காதல்மொழிகள்
பலியாகி வறண்டு கிடக்கிறது மனம் பாலைவனமாக
உன் நினைவுகளை உயிரில் சுமந்து, அமைதித்
தூதுவனாக நம் காதலை அனுப்புகிறேன்.

காரணமும் தெரியாமல் செய்யப் போகும்
காரியமும் புரியாமல்,வானம் நோக்கும்
பூமியாக தவமிருக்கிறேன் உன் வருகைக்காக.

மெல்லினமாய் இசையெழுப்பிய நீ இன்று
வல்லினமாய் மாறி இம்சிக்கிறாய் - வருந்தி
உள்ளத்தில் ஊமையாய் அழுவதை அறியாயோ

களிப்பாவில் துவங்கிய நம் பயணம் எங்கேயோ
தளை தட்டி முகாரி ராகம் இசைக்கிறது.
வாய்ப்பாட்டில் அடங்குவாயா?
வரம்புதாண்டும் செம்மறியாடாவாயா?
காலத்தின் முன் நிற்கிறேன் - நிராயுதபாணியாய்
விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி.

 


கற்பனைகளுக்கு உருவம் தந்து


என் கற்பனைகளுக்கு உருவம் தந்து
உன் பெயரை சூட்டிக் கொள்கிறேன்.
விரும்பிய படி உனைத் தீட்டிக் கொள்கிறேன்.

அமைதியாக அணுஅணுவாக இரசிக்கும்
உனக்கு சன்மானமாய் பெருமழையாய்
என் அன்பை உன்னுள் பொழிகிறேன்.

என் கனவுகளுக்கு மேடையாகிறாய்.
நான் நடத்தும் நாடகத்தில் உன்னை
பாத்திரமாக்கி உன் வழி என்
எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கிறேன்

உன்னுள் கரைந்து வெளிவருவதால்
உன் சாயங்களைப் பூசிக் கொண்டே
வெளி வந்து விழுகிறது என் எழுத்துக்கள்.

காணவில்லை என் கவிதைகளை

 
 
காணவில்லை என் கவிதைகளை
உயிரற்ற வெறும் வார்த்தைகள் மட்டுமே
உலா வருகின்றன உன் பார்வைக்காக.
நீரின்றி காயும் பூமியாக வாடும் இதயத்துள்
தேடுகையில் தொலைந்தே போகிறேன் நானும்.

உன் நினைவுகளெனும் கயிற்றை பற்றியபடி
ஒவ்வொரு அடியாய் நகர்கிறேன் உனை நோக்கி.
நெருங்கிவிட்டதாய் நினைக்கையில் மேகத்துள்
மறைந்த தூரத்து நிலவாய் சிரிக்கிறாய்.......

கடக்க வேண்டிய தூரங்கள் கண்களுக்கு
எட்டா தொலைவாக இருக்க சோர்ந்து,
பிடியை விடுகிறேன் என்னையறியாமல்
நிற்கிறேன் தொடங்கிய இடத்திலேயே.
 
மீட்பாய் எனற மனக்கோட்டை மெதுவாய்
சிதைந்து துகள்களாய் காற்றினில் கரைய ,
கடைசி சுவாசத்தில் என் வாசத்தை நிரப்பி
உன்னிடம் அனுப்புகிறேன் என் நேசத்தை சொல்ல.
 

சிறைப்பிடித்து


நின் கண்களெனும் அம்புகள் பட்டு
கண்ணங்களில் சிவப்புபூக்கள் பூத்து
செவ்வானமாய் காட்சியளிக்கிறது.

வண்டாக தேனை மிச்சமின்றி பருகி
பரவசத்தை கொட்டுகிறாய் என்னுள்.
தேனிருந்த இடத்தை அன்பால்
இட்டு நிரப்புகிறாய் நிறைவாக.

அடர்த்தி அதிகமாகியதில் தள்ளாடி
சாய்கிறேன் உன் தோள்களிலே.
கைகளுக்குள் சிறைப்பிடித்து சிறகுகளை
விரித்து பறக்க வைக்கிறாய் வானில்.

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்


இன்னதென்று புரியாத சோகங்கள்
இதயத்தை முழுதாய் நிரப்பி
இருட்டாக்கும் போது உனையே
இருளைப் போக்க அழைக்கிறேன்.
அன்பெனும் விளக்கை நீ ஏற்றி
அரவணைக்கையில், வெளிச்சமாகி
அழகாய் ஒளிர்கிறது உள்ளம்
அன்றலர்ந்த மலர் போல்..

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்
எதிர்ப்புகளே இல்லாமல் பயணித்து
எனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து
எல்லா நொடியும் ஏகாந்தத்தில் மிதக்கிறேன்.

விடைபெறுமுன்


 
விடைபெறுமுன் ஆயிரம் நாடகமாடுகிறாய்
காலத்தை கடத்துவதற்காக, ஊமையாய்
இரசித்து விட்டு உள்ளுக்குள் சிரிக்கிறேன்.

கடிகார முள்ளை கண்களாலேயே சிறைசெய்து
காலத்தை சிறைப்பிடிக்க எத்தனிக்கும்
உன் செயலில் தெறிக்கும் அன்பில்
நனைந்து மலர்கிறது மனமொட்டு.

பிணைந்த விரல்களில் ஆயிரம் கவிதைகள்
தீட்டி உதிரத்தில் கரையச் செய்கிறாய்.
கடைசி சுவாசத்தில் எல்லாம் கொட்டத்
துடிப்பது போல் ஒரு நொடிக்குள்
கடலளவு அன்பைக் கொட்டுகிறாய்.

அன்பின் வெப்பத்தை தாங்காது உயிர்
உருகி கண்ணீராக கன்னங்களில்
பெருக்கெடுக்க, உன் விரல்களால்
அணைபோடுகிறாய் அணைத்தபடி.
 
பிரியா விடை பெறுகிறேன் பிரியத்துடன்.
பிரியும் நொடி முத்தப்பூ விதைத்து
இதழ்களோடு இரகசிய ஒப்பந்தம்
போடுகிறாய் அடுத்த சந்திப்புக்காக.

மனதில் உன் நினைவுகளை சுமந்துபடி
கண்களில் உன் உருவத்தை சுமந்துபடி
உயிரினில் உன் காதலை சுமந்துபடி
விடைபெறுகிறேன் உன்னிடம், அடுத்த
சந்திப்பிற்கான கனவுகளை சுமந்த படி.......................
 

விடை தெரியா கேள்விகளுடனே


விடை தெரியா கேள்விகளுடனே
விடை பெறுகிறேன் உன்னிடம்.

காலங்கள் நமது நினைவுகளை
மங்கிப் போன புகைப்படமாக்கினாலும்
கலங்கிப் போன குளத்தில் அரைகுறையாக
தெரியும் பிம்பம் போல் நமக்குள் நாமிருப்போம்

நினைவு அடுக்குகளில் நம்மை பிரிய வைத்த
பிரச்சனைகள் அயுள் இழக்கலாம் ஒரு நாள்.

அன்று தெளிந்த குளமாய் மனம் மாறி
அருகாமைக்காய் ஏங்க வைக்கும் போது
பூமி நோக்கி ஓடிவரும் மழைபோல் வந்து
துளியாய் கடலில் கலப்பேன் என்ற நம்பிக்கையுடன்
விடைபெறுகிறேன் சொல்லாமலே

காத்திருப்பேன் எனத் தெரிந்துமே


 
காத்திருப்பேன் எனத் தெரிந்துமே
மெளனம் காக்கிறாய் அழுத்தமாய்.
வார்த்தைகளை வெளியே தள்ளி
கருணைக் கொலை செய்கிறேன்
உனக்கான வார்த்தைகள் மட்டும்
உயிருடன் வாழ்ந்து கொல்கிறது.

உன் பாதை தவிர்க்க கால்கள்
எங்கெங்கோ உலா போகின்றன
அங்கேயும் கண்கள் துழாவுவது
உன் பாதச் சுவடிகளையே........

எல்லாமறிந்தும் ஏதுமறியாதது போல்
நாடகமாடுகிறாய். உன் நாடகத்தில்
ஊமை பாத்திரமாக உலா வருகிறேன்.

எல்லாம் உடைத்து உன்னருகில்
ஓடிவரவே மனம் துடித்தாலும்
ஏதோ தடுக்கிறது என்னை....
 
உன் பிரியத்தை அறியும் பரிட்சையில்
விடை தெரியாவிட்டாலும் காத்திருக்கிறேன்
முழுமதிப்பெண்களுடன் உன் வரவுக்காக
 

மாயம் புரிகிறது உன்னால்


 
உன் புன்னகையின் பிண்ணனியும்
உன் துக்கத்தின் காரணமும்
நானென்ற இரகசியம் அறிந்தே
வினாக்களோடு உலா வருகிறேன்.
எதிர்பாரா சூழ்நிலையில்
எதிர்பார்த்த விடையளித்து
திக்குமுக்காட வைக்கிறாய்

திணறி நான் நிற்கையிலே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்
மர்மப் புன்னகையை
எதுவுமே நடவாதது போல்

நீ கண்ணங்களில் ஏற்றிய
சிவப்பு நிறத்தை மறைக்க
தடுமாறுகையில் மேலும்
சிவப்பேற்றுகிறாய் ஒரு
ஒற்றை முத்தத்தில்....
விடைதெரிந்த வினாக்களும்
வாழ்வை சுவாரசியமாக்கும்
மாயம் புரிகிறது உன்னால்

Saturday, September 1, 2012

கடலில் கலக்கும் துளிபோல



உன் ஒற்றை விளிப்பில் பனிபோல் மனமுருக
கடல் தேடி ஓடும் நதியாய் வந்தடைகிறேன்.
 

அலைகளை அறிமுகப்படுத்துகிறாய்.
துள்ளும் மீன்களை நட்பாக்குகிறாய்.
திமிங்களங்களிடம் திராணியின்றி தவிக்கையில்
திடமாய் எதிர்க்க கற்றுக் கொடுக்கிறாய்.
 

நண்டுகளின் நர்த்தனங்களை நிம்மதியாய்
இரசிக்க வைக்கிறாய் அருகிருந்து.
சங்குகளின் நாதத்தில் மெய்மறக்கவைக்கிறாய்.
மூச்சு முட்ட முத்துக்களை அள்ளச்செய்கிறாய்.
 

ஒவ்வொரு செல்களையும் பூக்கவைக்கிறாய்
பேரின்ப அமைதியில் ஆழ்த்துகிறாய்.
கடலில் கலக்கும் துளிபோல
காணாமல் போகிறேன் உன்னுள்.


சிறகினையசைத்து

 
சிறகுகளுக்குள் சிறைபிடிக்க நினைக்கிறேன்
காற்றாய் சுழன்றடித்து சுகமூட்டும் உன்னை
சிறகுகளை இழக்கிறேன் காற்றின்வேகத்தில்
இழந்த சிறகுகள் இமைக்கும் நேரத்தில்
கண்விட்டு அகல கலங்குகிறேன்........
 
சிறகுகளை மீட்கும் முயற்சியில் எனைத்
தோல்விகளே முத்தமிட்டுச் செல்கின்றன.
இயலாமையின் உச்சத்தில் கோபச் சிறகு
வேகமாய் வளர்ந்து எனை மூடுகிறது.....
 
மூடிய சிறகின் வெப்பத்தில் வெந்து
வெறுப்பு விதை விதைக்கிறேன்.
கசந்த நினைவுகளை தோண்டியெடுத்து
உரமாக்குகிறேன் அவ்விதைக்கு.
இராட்சஷன் போல் வளர்ந்து
உயிர்வாழ்க்கிறது என் உயிர் குடித்து.
 
தனிமை போதிமரமாய் போதனைகள்
பல கூற வேரோடு வெட்டுகிறேன்
இராட்சஷ  வெறுப்பு மரத்தை........
பாசத்தீயில் கோபச் சிறகுகள் உருகி
காணாமல் போக உயிர்த்தெழுகிறேன்
 
அன்பெனும் பல வண்ணச் சிறகுகள்
அடர்த்தியாய் முளைக்க அழகாய்
இசையமைக்கிறேன் சிறகினையசைத்து
சிறைபிடிக்கும் எண்ணம்தவிர்த்து..............

Thursday, August 30, 2012

சூறாவளிப் பேரன்பில்





உன் சூறாவளிப் பேரன்பில் திசை தெரியாமல்
சுழன்றடிக்கப்படுகிறேன் சிறு இலை போல்.
ஒரு நிமிடம் சந்தோஷமெனும் கோபுரத்தில் ஏற்றுகிறாய்
மறுநிமிடம் துன்பமெனும் குப்பைத்தொட்டியில் எறிகிறாய்.
மாறி மாறி நீ ஆடும் கண்ணாபூச்சி ஆட்டத்தில்
கருணையே இல்லாமல் பந்தாடப்படுகிறேன்.......... 
 
விரும்பியே வந்தடைந்ததால் விலகாமல்
பயணிக்கிறேன் உன்னுடன், உன் ஆசைப்படி.
உன் அரவணைப்பின் நிழலுக்குள்ளே
வார்த்தை அம்புகளால் இதயத்தை கீறிவிட்டு
உதடுகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறாய்.
 
சிலசமயம் வெறுமையில் மனம் உறைய
தனிமை தேடி சிறைப்படுகிறேன்.
உன் அன்பின் அடர்த்தியில் இரத்தம்
சொட்ட சொட்ட காயப்படுகிறேன். 
 
விரும்பியே சிலுவை சுமக்கிறேன்
என்றேனும் சூறாவளி ஓய்ந்து
தென்றல் வீசுமென்ற நம்பிக்கையில்.

மழை



மழையின் அறிகுறி மனதில் கீதம்பாட
வரவேற்க விரைகிறேன் வாசலுக்கு.......
மேகத்திடம் விடைபெற்ற மழைத்துளிகள்
வேகமாய் வீழ்கிறது புது உலகு காண......
 

எனக்கான முதல்துளி நடு உச்சியில்
நயமாய் விழுந்து பரவசத்தில் ஆழ்த்துகிறது.
இரண்டாம் மழைத்துளி தோளில் தரையிறங்கி
மனதில் மகிழ்ச்சிபூவை தூவிவிட்டு
விரல்நுனி நோக்கி விரைகிறது.
 

அடுத்தடுத்து வீழ்ந்த துளிகள்
மேனி முழுதும் நனைத்து
இன்பத்தால் இதயத்தை நிரப்புகிறது.
 

பாதங்களை மூழ்கடித்த தண்ணீரில்
தாளமிடுகிறேன் தப்புத்தப்பாய்.........
மழைத்துளிகள் அதற்கும் அழகாய்
நர்த்தனமாடி மகிழ்விக்கின்றது.
 
மறுஜென்மம் எடுக்கிறது குழந்தைத்தனம்.
அடித்துச் செல்லும் மழைக்கு வழித்துணையாய்
சோகங்கள் விடைபெறுகின்றன என்னிடமிருந்து.

மழை கடந்த பின்பும் அதன் நினைவாய்
மேனியெங்கும் பரவிக்கிடக்கின்றன
சில மழைத்துளிகள்..............................


எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது



சோகமும்,சுகமும் கலந்த கலவையாய் மனம்
 ஏனோ தானோ என்றே நகர்கிறது மணித்துளிகள்
 மகிழ்ச்சிப்பூக்கள் மலராமல் மொட்டாகவே கருகிறது
 என்னவென்றே தெரியாத இருள் மெதுவாய் சூழ்கிறது
 எதையையோ சாதிக்க துடிக்கிறது புத்தி
 தோல்வியுண்ட வீரனாய் மனம் துவள்கிறது
கண்டறியும் சக்தியில்லாமல் கட்டுண்டு கிடக்கிறது. 

தனிமையைத் தேடியே ஓடும் மனதை,
சிறைப்பிடித்து கேள்விகளால் கதறடித்து
பேரிண்பம் காணும் புத்தியிடம் சிக்கி
கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சாய்
நடுங்கிறது மனம் நிர்கதியாய்..........
 

புரியாத புதிராய் வாழ்க்கை சிரிக்க
துடுப்பை இழந்து ஓட்டைப்படகில்
தன்னம்பிக்கையோடு எதையோ
எதிர்பார்த்து மனம் காத்துக்கிடக்கிறது.......

 


Sunday, August 26, 2012

சமாதானம்


விலகுகிறேன் மனதளவில்
என்னையறியாமல் .............
காலங்கள் பிரித்த பொழுது
வாழத் துடித்த மனது
காலம் கைகூடி வரும் போது
சண்டிமாடாய் சதிசெய்கிறது.

கண்ணீர் மல்க மன்றாடுகிறேன்
கதவடைத்துவிட்டது செவிடன்போல்
அவிழ்கமுடியா முடிச்சாகிறது வாழ்க்கை

விளையாட்டாகவோ,வினையாகவோ
நீ செய்த சில செயல்கள்
மனதைக் காயப்படுத்தி
புண்ணாகவே இருக்கிறது இன்னமும்
 
புண்களில் வழியும் வெறுப்பினால்
கருணையேயில்லாமல் காயப்படுத்தபடுவாய்
சொல்லாமலே விடைபெறுகிறேன்
உன் முத்தங்களின் ஈரங்களோடு
நலமாயிருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
 

வாழ்க்கைத் தண்டவாளம்


நம் அன்புக் கூட்டுக்குள்ளே
திகட்ட திகட்ட தேனருந்திய பின்
அரவணைக்கும் உன்கரங்களுக்குள்
தஞ்சமாகிறேன் குழந்தைபோல
உன் கரிசனத்தில் கரைந்து
உன் அன்பினில் ஆழ்ந்து
உன் அணைப்பில் மலர்ந்து
உன் கோபத்தில் கருகி
காற்றின் திசைகேற்ப
திரும்பும் இறகாய்
உன் உணர்ச்சிகளுக்குகேற்ப
உடை பூண்கிறது உள்ளம்

தடுமாறும் தருணங்களில்
தாங்கிப் பிடித்து தடம்
வகுத்து வழிநடத்துகிறாய்
 
ஆர்வத்தினால் அதிவேகமாய் சென்று
அடிபட்டு விழும் நேரங்களில்
கவசம் போல் காக்கிறாய்
சிறு கீறல் கூட விழாமல்

என்னுடனான உன் பயணம்
கஷ்டமெனும் போதினிலும்
இஷ்டமாக இணைகிறாய்
வாழ்க்கைத் தண்டவாளத்தில்
 

சிலந்திக் கூடு


வாழ்க்கைச் சிலந்திக் கூட்டில்
விடுதலை கிடைத்தும் அடிமையாய்
விரும்பியே கிடக்கிறோம் இருவரும்.

கூட்டின் ஒரு முனையை நீயும்
மறுமுனையை நானும் பற்றியிருந்தாலும்
உன் கழுகுப் பார்வையால்
என் ஒவ்வொரு அசைவையும்
வழிநடத்துகிறாய் உனை நோக்கி.....

புரிதலெனும் போர்க்களத்தில்
உயிர்த்தெழும் சண்டைகளனைத்தும்
உரமாகின்றன நம் அன்பெனும் மரத்திற்கு

மரம் பூத்துக் குலுங்குகையிலும்
நிழலில் இளைப்பாறிய படியே
தொடர்கிறது நமது சண்டைகள்

பயணத்தில்......


 
அடித்துப் பிடித்து அமர்ந்தபின்
மறைகிறாய் இரயிலின் ஓட்டத்தில்
ஒரு புள்ளியாய், உன் வாசனையை
காது வருடும் காற்றில் கசியவிட்டு.......
நினைவுகளில் நாழிகைகள் நகர்வதால்
பலவித பாவங்கள் நர்த்தனமாடுகின்றன,
முகத்தினில், பைத்தியமோ என்ற ஐயத்தை
உயிர்தெழவைக்கிறது சகபயணியிடம்

அசை போட்டு ஆனந்தப்படுவதில்,
மனம் நிரம்பி, இதயத்தில் வழிந்து,
இரத்த நாளங்கள் துடித்தெழுந்து
சிவப்பு பூக்களாய் பூக்கின்றன
வெண்மையான கன்னங்களில்.

இதழ்களோ உன் நாமத்தையே
தவமாய் உச்சரிப்பதால் வரமாய்
புன்னகை அங்கே தவழ்கிறது.
 
நினைவுகளில் மூழ்கி நினைவிழந்ததால்
இறங்க வேண்டிய இடத்தை கடந்தபிறகே
இறங்க யத்தனிக்கிறேன் உனைத் திட்டியபடியே.......
மெதுவாய் நீட்டினார் டாக்டரின் விலாசத்தை
அந்த பக்கத்து சீட்டுக்காரர்.................................

அவரின் பரிதாப பார்வை புரிந்து
இடி போல் நான் சிரிக்க
மின்னலென மறைந்தே போனார்

தொலைவிலிருந்தும் எனைப்
பைத்தியமாக்கும் உன்னை
ஆயுள் தண்டனைக் கைதி
ஆக்கிவிட்டேன் இதயச் சிறையிலே........
 

பறக்கிறேன் இலக்கினையடைய


 
நினைவுகளை மட்டுமே நிழல்போல்
நிறுத்திவிட்டு, நிறுத்திவிட்டாய்
உன் கடைசி மூச்சினை.......

பாறாங்கற்கலாய் பாரங்கள்
இறகுகளை சுற்றி இறுக்க
பறக்கநினைக்கிறேன் பலவந்தமாய்....

ஒவ்வொருமுறையும் தன்னம்பிக்கைச்
சிறகிழந்து வீழ்கிறேன் விடியல்களில்...
முயற்சிகள் தொடர்கின்றன் விடாமல்
முற்றிலுமாய் சிறகுகள் இழக்கும் வரை......

வற்றிய கண்ணீரும்,சோர்ந்த உள்ளமும்
தவியாய் தவிக்கிறது உன் அருகாமைக்காக,
தவிப்புகளை கோர்த்து வைராக்கியமாக்குகிறேன்.
அதுவே உந்து சக்தியாக மாற வானம் நோக்கி
சிறகுவிரித்துப் பறக்கிறேன் இலக்கினையடைய..........

வீறு கொண்டு எழுவோம்


தன்னம்பிக்கையிழந்து, தைரியமிழந்து
கண்ணீர் விட்டு,காலடியில்
வீழ்வோம் எனக் கனவு கண்டாயோ?

வேர்களை வெட்டி விட்டு
நீ அர்ப்பரிக்கும் நிமிடத்தில்
ஆயிரம் விதைகளை விதைத்ததை
அறியாயோ.......

உன் இராஜதந்திரத்தால் இன்று
வீழ்ந்தது போல் தோன்றினாலும்
வெட்ட வெட்ட துளிர்க்கும்
அதிசய சீவன்கள் நாங்களென்பதை
அறியாத மூடன் உனை வீழ்த்த
வீறு கொண்டு எழுவோம்...........

தெரிந்தே தொலைகிறேன்


 
உன் தேடல்கள் தெரிந்தே தொலைகிறேன்
தூரமாய் நின்று இரசிக்கிறேன் உன் தவிப்புகளை
தவிப்புகளில் தெறிக்கும் அன்புச் சாரலில்
சொட்டச் சொட்ட நனைகிறேன். 
கண்களும் மனமும் சோர்ந்து
துவளுகையில் ஓடி வந்து
தாங்கிக் கைப்பிடிக்கிறேன்.

சிறு அழுத்தலில் என் அன்பினை
கரத்தின் வழி இதயம் நிரப்புகிறேன்.
நாடகமறிந்து கோபம் கொள்கையில்
அன்பெனும் புயல் காற்றால்
வேரோடு சாய்க்கிறேன் உன் கோபத்தை

துக்கங்களை தூக்கிலிட


 
துருவங்களாய் நாம் பிரிந்து
துக்கங்களைப் பெரிதாக்கி
துன்புறும் வேளையிலே
தூக்கத்திலும் துக்கமடைக்கிறது.
துயரங்களை தூக்கிலிட
துடிக்கிறது துவளும் மனம்.

ஆயிரம் அர்த்தங்கள்
அமிழ்ந்த அருஞ்சொற்களை
அருவியாய் கொட்டும் உன் அதரங்கள்
அமைதியெனும் ஆடைபூண
ஆற்றாமையில் அரற்றுகிறேன்.

காற்றினிலே கலந்துவந்த
கலங்கவைக்கும் கட்டிலடங்கா
கற்பனைகளிலுள்ள கபடங்களை
கண்டுணர காதல்மனமும்
காலதாமதமாக்க, காலமும்
காலனாய் காட்சியளிக்க
காத்திருக்கும் பொறுமையற்று
காணாமல் போனாயோ?
 
இன்பமாய் நாமிருந்த காலங்களில்
இனியதாய் நீயுரைத்த இன்சொற்கள்
இகழ்ச்சியாய் இன்று எனை நோக்க
இறக்கும் என் இதயத்திற்கு
இதமாய் நீயிருக்கும் நாளுக்காக
இருவிழி பூக்க காத்திருக்கிறேன்.
 

Friday, August 10, 2012

பொறுமை விடாதிருக்க யாசிக்கிறேன்



சிறு சலசலப்பிற்கும்
சஞ்சலப்பட்டு ஓடி வருகிறேன்
உன்னிடமே, சமாதானங்களுக்காய்....


ஒவ்வொருமுறையும்
தாயின் பொறுமையோடு
செவிசாய்த்து,விளக்கமளித்து
தெளிந்த நீரோடையாக்குகிறாய்.


சபதம் ஏற்கிறேன்
இதுவே கடைசிமுறையென்று.
பிரசவ கால வைராக்கியமாய்
உடைக்கப்படுகிறது அடுத்த சலசலப்பில்.


உன் பொறுமைகள் உடைபடுவதையும்,
மெளன அணைப் போட்டு தடுத்து
நீ தவிப்பதையும் உணரமுடிகிறது.


சிறிது கால அவகாசம் கேட்கிறேன்
என்னை திடப்படுத்திக் கொள்ள,
அதுவரை பொறுமை விடாதிருக்க
யாசிக்கிறேன் உன்னை.........

மலரும் நினைவுகள் - 5



சில நெருங்கிய உறவினர்களின் பெயர்களும்,முகங்களுமே பல வருடங்களுக்குப் பிறகு மறதிப் பட்டியலில் சேர்ந்து விடும். ஆனால் சில காலம் மட்டுமே பழகிய சிலரின் முகம் பசுமரத்தாணி போல் மனதில் பசுமையாக இருக்கும். அப்படி ஒரு நபர் தான் “விசாலம் அக்கா” அவரைப் பற்றிய சில நினைவுகள் இந்தப் பதிவில்.

விசாலம் அக்கா

விசாலம் அக்கா என்றாலே அவரது வேகம் தான் நியாபகத்திற்கு வரும். நான் அவரை முதன் முதலாக பார்த்தது அவரது 5 வயது குழந்தையுடன் தான். தீபாவளி சமயங்களில் கை முறுக்கு சுற்றித் தர வருவார். பாட்டிக்கு உதவிக்கு ஆள் தேவை எனும் போது வீட்டு வேலைகளில் உதவுவார். கடகடவென 200 முறுக்குகள் அரை மணி நேரத்தில் சுற்றி விடுவார். அவரது கைகளில் லாவகத்தை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருப்பேன்.

”எனக்கும் சுத்த ஆசையாய் இருக்கு அக்கா” என்ற போது கொஞ்சம் மாவை எடுத்து சுற்றுவதற்கு சொல்லிக் கொடுத்தார். அன்று முழுவதும் அந்த மாவு என்னிடம் பட்ட பாடு ஆண்டவனுக்கே வெளிச்சம். எப்படியோ ஒரு வழியாக கற்றுக் கொண்டு ஒரு முறுக்கு சுற்றுவதற்குள் அவர் 20 முறுக்குகள் சுற்றி முடித்திருப்பார். ”எப்பக்கா உங்கள மாதிரி வேகமா சுத்த வரும்” என்று ஆதங்கத்தோடு கேட்பேன். “வயித்துப் பொழப்பே இது தான் கண்ணு,வேகம் தானா வந்துருச்சு” என்பார்.

18 வயதில் ஒருவனைக் காதலித்து திருமணம் முடிந்த பிறகே அவனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பது தெரியவர, பெரிய பிரச்சனைக்குப் பிறகு குழந்தையுடன் தனியாக வாழ்கிறார் என்பதை அம்மாவில் மூலம் கேட்ட போது அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.அவரது பையன் சேகர் என்னை விட 6 வருடங்கள் சிறியவன். அப்பா இருந்தும் இல்லாத அவன் மேல் தனிப் பாசம் எப்போதும் உண்டு எனக்கு.

“அந்த ஆளு முன்னால என் பையனை படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனும்” என்று சொல்லுவார். ஒரு சிறிய அறை தான் அவரது குடித்தனம். அவனை நல்லவனாக வளர்த்த வேண்டும் என்பதற்காக அடித்துத் தான் வளர்த்தினார். அவர் சேகரைக் கொஞ்சி நான் பார்த்ததே இல்லை.அவன் ஒரு முரட்டுக் குழந்தையாகவே வளர்ந்தான்.

படிப்பிலும் சுமாரான மாணவனாகவே இருந்தான். எப்பொழுதாவது விசாலம் அக்காவுடன் வீட்டிற்கு வரும் போது ஒரு மூலையில் எதுவும் பேசாமல் அமர்ந்து இருப்பான். அம்மா,அப்பா எங்களைக் கொஞ்சும் போது, ஒரு ஏக்கமான பார்வையே அவன் கண்களில் இருந்து வெளிப்படும். “இங்க வாடா சேகர்” என்ற அப்பாவின் குரலுக்கும் பதில் வராது அவனிடமிருந்து. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு பலகாரங்கள் கடையில் வாங்க ஆரம்பித்ததால் விசாலம் அக்காவை அதன் பிறகு பார்க்கும் சந்தர்பம் அமையவில்லை.

ஒரு நாள் பல் டாக்டரிடம் சென்ற போது அங்கே வேலை செய்து கொண்டு இருந்தான்
“அக்கா,என்னைத் தெரியுதா,சேகர்” என்றான்.நன்றாக வளர்ந்து இருந்தான். அடையாளமே கண்டு பிடிக்க முடியவில்லை.
“டேய் சேகர், நீயா, அடையாளமே தெரியலை, அம்மா எப்படி இருக்காங்க, என்னடா இங்க வேலை செய்யர,படிக்கலையா” என கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு இருந்தேன்.
“அக்கா, மூச்சு விடுங்க முதல்ல” என்று சிரித்தான்.முழுவதுமாய் மாறிப் போய் இருந்தான். முரட்டுத்தனங்கள் போய் அமைதியான பையனாக காட்சியளித்தான்.
”8வது முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்துட்டேன் அக்கா, அம்மாவை எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாமுனு சொல்லிட்டேன், அம்மாவை நல்லா பார்த்துகனும் அக்கா” என்று சொல்லும் போது குரல் லேசாக தழுதழுத்தது. அவனைப் பார்க்க பெருமையாய் இருந்தது. சின்ன வயதில் அவனது பொறுப்புணர்ச்சி ஆச்சரியமாக இருந்தது எனக்கு. அதே சமயம் வீட்டில் குழந்தைத்தனமாய் அடம்பிடித்து எல்லோரையும் படுத்தும் என்னை நினைத்து ஒரு ஓரத்தில் வெட்கமாக இருந்தது. நானும் இனிமேல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். நம்ம சபதத்திற்கு ஆயுள் என்றுமே ஒரு நாள் தான் என்பது தான் ஊரறிந்த இரகசியமாயிற்றே.பொள்ளாச்சி விட்டு சென்ற பிறகு அவர்களைச் சந்திக்கவே இல்லை. திருமணம் முடித்து மும்பை சென்ற பிறகு பொள்ளாச்சி பக்கமே போகவில்லை.

ஒரு நாள் அலைபேசியில் அம்மா அழைத்த போது குரல் ஏனோ பிசிறு தட்டியது. நல விசாரிப்புகளுக்குப் பிறகு அம்மா சொன்னது காதில் இடிபோல் இறங்கியது.
“என்னமா சொல்ர, நல்லா தெரியுமா, நம்பவே முடியலை” என்றேன்.
“விசாலம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா அந்தப் பையனை, இப்படி பண்ணிட்டானே, காதல் தோல்வினு தற்கொலை பண்ணி அவளை நட்டாத்துல விட்டுட்டான்” என்று புலம்பித் தீர்த்து விட்டார்.
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம் அது. தற்கொலை செய்யும் முன் ஒரு நிமிடம் தாயைப் பற்றி யோசிக்காத சேகர் மேல் கோபம் கோபமாக வந்தது. என்னை அறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
காதலித்து ஏமாற்றிய தந்தை
காதலுக்காக தற்கொலை செய்து கொண்ட மகன்
இருவராலும் பாதிக்கப்பட்டது என்னவோ விசாலம் அக்கா தான்.