Sunday, June 1, 2014

மழைத்துளிகள்

பெரும் மழையை சுமந்து வருகிறது
கருமேகம் என் திசை நோக்கி
சிறுதுளியில் நனைய துடித்தது
பெரும் மழைக்கு பயந்து
பின்வாங்குகிறது மனம்....

இருவருக்குமான போட்டியில்
வேகமாக முன்னேறி தஞ்சம்
புகுகிறேன் ஓர் கூரைக்குள்

மழை ஓய்ந்தபின் மெதுவாய்
தலைகாட்டுகிறேன் சாதித்த
நிம்மதியில்......................

இலைகளில் மறைந்திருந்து
என்மேல் பொழிந்துவிட்டு
முற்றிலும் நனைத்துவிட்டு
நகைத்தன வெற்றிக்களிப்பில்
மழைத்துளிகள்......................

Saturday, November 16, 2013

வார்த்தைகளின் உரசல்கள்

 
ஆகப்பெரும் சண்டையாக
முடிந்திருந்தது வார்த்தைகளின்
உரசல்கள் முன்னறிவிப்பேயில்லாமல்
 
இப்படி முடியுமென்ற
சிறு சாயலுமில்லை
தொடக்கத்தில்..........
 
இருவருக்குமே பொதுவான களமென்பதால்
வார்த்தைகளில் உரசல்கள் சிறிது
மூர்க்கமாகவே இருந்தன.
 
விழுந்து சிதறிய வார்த்தை
உடைத்து சிதைத்தது
நம்பிக்கை பாத்திரத்தை
 
உடைந்ததை ஒட்டிவைக்கவும்
தேவையாகவே இருக்கிறது
வார்த்தைகள் மூர்க்கமான அன்புடன்....
 

இருந்துவிட்டு போகட்டுமே



மை தீர்ந்த பேனா,
துணி கிழிந்த குடை,
உடைந்த வளையல்,
சாக்லேட் பேப்பரால்
தோழி செய்த பொம்மை,
நண்பன் ஒருவனின்
கையெழுதிட்ட
கிழிந்த காகிதம்,
தங்கையிடம் சண்டையிட்டு
பிடுங்கிய முகம்
சிதைந்த மரப்பாச்சி,
அம்மாவின் கனவுகள்
புதைந்த ஓர் ஓவியம்,
அப்பாவின் செல்லரித்த
குழந்தை படம்,

இருந்துவிட்டு போகட்டுமே
எனக்கானதாய் என்றுமே
உபயோகமில்லையெனினும்
பெரும் பிரபஞ்சத்தின்
ஓர் மூலையில்.................

ஒற்றைவார்த்தை



இந்த ஒற்றைவார்த்தை
இத்தனை பாதிப்பை
ஏற்படுத்துமென கனவிலும்
நினைத்ததில்லை

அத்தனை வெறுப்புக்களையும்
திணித்து இவ்வார்த்தையை
உருவாக்கியிருப்பாயோ????

நுகர்ந்த ஓர் நொடியில்
கசந்துவிட்டது இதயம்.

இனி எத்தனை அன்புத்தண்ணீர்
கொட்டி கரைக்கப்போகிறாய் இக்கசப்பை.
கரையக்கூடியதுதானா இதுவென்றும்
உறுதியாய் தெரியவில்லை

கலையாத மேகம்





 
அரவணைப்பிற்காக ஏங்குகையில்
அருகினில் இருந்ததில்லை

கைகுலுக்க தேடுகையில்
கால்கடுக்க ஓடுகிறாய்
திரும்பியே பாராமல்

எண்ணங்களை பகிர நினைக்கையில்
எதிரிபோல் மாறிவிடுகிறாய்

நிழலெனுக்கு என்கிறாய்
நிச்சயமாய் பார்க்கவில்லை
நானுன்னை முப்பொழுதும்

கனவினில் மட்டுமே
கலையாத மேகம் நீயெனுக்கு


Thursday, November 14, 2013

ஆசீர்வதிக்கப்பட்ட தினம்


இன்று ஏதோ ஆசீர்வதிக்கப்பட்ட தினமாகவே தோன்றுகிறது. என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட சகோதரனை கண்டெடுத்த நொடியை தன்னுள் புதைத்ததால் இந்த நாள் அப்படித்தோன்றுகிறதோ.

எத்தனை பெரிய எழுத்தாளராக என்னிடம் அறிமுகமாகிய நொடியில் விழிவிரிய பார்த்து “பேசமுடியுமா” என்று ஏங்கிய நொடியை தின்று அன்பு சகோதரன் என்று கூறிய நொடி உள்ளத்துள் பொக்கிசமாக புதைக்கப்பட்டது.

மனம் சந்தோச மிகுதியில் மெளனமாக கத்துவது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் பெரும் ஒலியாக கேட்கக்கூடும்

# அன்புக்கு பாத்திரமாதல் எத்தனை ஆனந்தம்

சிறு புள்ளி நான்



பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும்
சிறு புள்ளி நான்........